மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு 55 லட்சம் மதிப்பில் 200 மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில், கரோனா 2ஆம் அலை வீசி வருகிறது என தகவல் வருகிறது. அதிலிருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக அரசு எடுத்துவருகிறது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி பொங்கல் பரிசு வழங்கப்படும், பொங்கல் பரிசு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை கழித்தும் பொங்கல் பரிசை வாங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 2 கோடியே 6 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
ஊடகத்தில் செய்திவரவேண்டும் என்பதற்காக நாள்தோறும் திமுக தலைவர் பேசிவருகிறார். முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். சினிமா நடிகரைப் போல் முதலமைச்சரை மக்கள் பார்த்து வருகிறார்கள். கூட்டணி கட்சியினர் இடையே எந்தவொரு விவாதமும் இல்லை.
தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணிக் கட்சியை அழைத்துப் பேசுவோம், திமுக கிராம சபைக் கூட்டத்திற்கு 200 அல்லது 300 ரூபாய் கொடுத்து மக்களை அழைத்து வருகிறார்கள். திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆளும். வரும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவில் சாதாரண தொண்டர்கள் அதிகாரத்திற்கு வர முடியாது' - முதலமைச்சர்