தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே பொதுமக்களுக்காக அகழாய்வு களத்தைப் பார்வையிட நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை நான்கு மணிவரை அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். பார்வையாளர்களுக்கு தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர்கள் விளக்கமளித்துவருகின்றனர்.
அடுத்தபடியாக ஆறாம்கட்ட ஆய்வு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் எனவும் அதனால் அக்டோபர் 13ஆம் தேதியுடன் பொதுமக்கள் அகழாய்வு களத்தைப் பார்வையிடுவது தடை செய்யப்படும் என்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பல்வேறு மாணவர்களும் பொதுமக்களும் கீழடி அகழாய்வு களத்தை பார்வையிட்டுவருகின்றனர்.
நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பார்வையாளர்களின் பேட்டியை காண்போம்...
மலேசியாவிலிருந்து கீழடியை பார்வையிட வந்த லோகேஸ்வரன் - சசிகலா ராணி தம்பதி கூறுகையில், ”சமூக வலைதளங்கள் மூலமாகவே கீழடியைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆகவே, கீழடியை உடனடியாக பார்வையிட முடிவுசெய்து இன்று கீழடிக்கு வந்தோம். கீழடி களத்தை பார்வையிட நாளைதான் கடைசி என்று கூறியிருப்பது வருத்தமாக உள்ளது. மலேசியத் தமிழர்கள் நிறைய பேர் கீழடியை பார்வையிட மிகுந்த ஆவல் கொண்டுள்ளனர். எனவே, களத்தை பார்வையிட கால நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் வித்யா கூறுகையில், ”கீழடியில் நாங்கள் கண்ட பழமையான விஷயங்கள் அனைத்தும் மிகுந்த வியப்பிற்கு உரியவையாக உள்ளன. இன்று மட்டும் ஏறக்குறைய 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இங்கு பணியாற்றுகின்ற தொல்லியல் அலுவலர்கள் நமது சந்தேகங்களைப்போக்கும் வண்ணம் விளக்கம்தருகின்றனர். பார்வையாளர்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். வருங்காலத் தலைமுறையினருக்காக கீழடி அகழாய்வுக் களத்தை பார்வையிட நாள் நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றார்
அணு ஆற்றல் துறையில் பணிபுரியும் சுமதி கூறுகையில், ”வருகின்ற ஞாயிற்றுக்கிழமை உடன் கீழடி அகழாய்வு மூடப்படுகிறது என்ற செய்தியை கேட்ட உடன் சென்னையிலிருந்து உடனடியாக புறப்பட்டு வந்தோம். இங்கு வந்த பிறகுதான் இந்த இடத்தின் தொன்மையையும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும் எங்களால் உணரமுடிந்தது.
தமிழ் மொழியும் தமிழர்களும் எவ்வளவு பழமை வாய்ந்தவர்கள் என்பதை வருங்காலத் தலைமுறையினர் உணர்வதற்கு எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எனவே தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பார்வையிடுவதற்கான நாள்களை நீட்டிக்க வேண்டும்” என்றார்.
மதுரை தியாகராஜர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருணா கூறுகையில், ”2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இங்கு மக்கள் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியும்போது உண்மையிலேயே பெருமிதமாக இருக்கிறது. எங்களது கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் இந்த இடத்தில் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். மாணவர்கள் கீழடி அகழாய்வு களத்தை பார்வையிட அதிக ஆர்வம்கொண்டு வருகைபுரிகின்றனர் என்பதை எங்களால் உணர முடிகிறது” என்று கூறினார்.