மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது பழையூர்பட்டி கிராமம். பண்டைய வெள்ளலூர் நாட்டுப் பிரிவின் கீழ் வருகின்ற ஊர்களில் இது முக்கிய கிராமமாகும். பழையூர்பட்டி ஊரணியும், அங்குள்ள கிணறுகளும்தான் அவ்வூர் மக்கள் புழங்குவதற்கான முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள ஊரணி, சரியான முறையில் தூர்வாரப்படாமல், நீர்க் கொள்ளளவு மிகக் குறைந்தே இருந்து வந்தது. தற்போது புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரதான் என்ற நிறுவனத்தின் முன்முயற்சியில், கிராம மக்களும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து இந்த ஊரணியை சீரமைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராமத்தின் முக்கிய பிரமுகர் கருப்பையா கூறுகையில், "பழையூர்பட்டி வேளாண்மை நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் நாங்கள் இயங்கி வருகிறோம். பிரதான் அமைப்பின் நிதி உதவியோடும், கிராம மக்களின் பங்களிப்போடும் இந்த ஊரணியை ஆழப்படுத்தி சீரமைத்துள்ளோம். இதன் மூலம் தற்போது 300 குடும்பங்கள் பயனடையும். பிற கிராமங்களுக்கு முன்னோடியாக இந்த நீர்நிலை சீரமைப்புப் பணி உள்ளது" என்றார்.
பெரியார் கால்வாயிலிருந்துதான் ஊரணிக்கு தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. விவசாயத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குடிநீருக்கும் வழங்கப்பட்டுதான் ஊரணியில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை ஊருணி எட்டவிருப்பது கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டநத்தம்பட்டி ஊராட்சி தலைவர் உஷா இளையராஜா கூறுகையில், "ஊராட்சி நிர்வாகம் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில் ஊரணி மேம்படுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலத்தில் ஊரணியைச் சுற்றி வேலி, மரங்கள் அமைத்துப் பராமரிக்கும் பணியை ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அவ்வூரைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன் பேசுகையில், "ஊருணியின் நீளம் 67 மீட்டரும், அகலம் 55 மீட்டரும் ஆழம் 2 மீட்டரும் தோண்டப்பட்டுள்ளது. மூன்றடுக்காக ஊருணி வெட்டப்பட்டு, கரையில் மண் குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமமே தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. ஊரணியைச் சுற்றி வேலி அமைக்கவும், கரையைப் பலப்படுத்தி மரங்கள் நடவும் உதவிகள் கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றார்.
வெறும் 4 அடி ஆழமே இருந்த ஊரணி தற்போது 15 அடி ஆழம் வரை வெட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் சென்று பணி புரியும் இளைஞர்கள் பெருமளவில் பழையூர்பட்டி வளர்ச்சிக்கு உரிய அளவில் பங்காற்றி வருகின்றனர். மிகவும் தூர்ந்து போய்க் கிடந்த இந்த ஊரணியை தற்போது சிறப்பான முறையில் சீரமைத்துள்ளனர்.
இந்த முயற்சி குறித்து பிரதான் அமைப்பின் திட்டத்தலைவர் இரா.சீனிவாசன் கூறுகையில், "பிரதான் நிறுவனத்தின் சார்பாக ரூ.1.40 லட்சமும், ஊர் மக்களின் சார்பாக சுமார் ரூ.2.30 லட்சமும் பெறப்பட்டு வேலை நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் மூலமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களின் 24 கிராமங்களில் நீர்நிலை சீரமைப்புப் பணிகள் உள்ளூர் மக்களின் துணையோடு நடைபெற்று வருகின்றன' என்கிறார்.
பொதுமக்களின் பங்கேற்பிருந்தால் எந்த திட்டமும் வெற்றிகரமாகவே அமையும் என்பதற்கு பழையூர்பட்டி கிராமம் ஒரு முன்னுதாரணமாகும். தங்கள் ஊருக்கு வந்த தண்ணீரை குலவையிட்டும், சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியும் கொண்டாடிய மக்களுக்கு, பல்லாண்டு பிரச்சனை தீர்ந்துள்ளது குறித்து இப்போது பெருமகிழ்ச்சிதான்..
இதையும் படிங்க: தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!