மதுரை: சோழவந்தான் அருகே கீழநாச்சிகுளம் கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அருகிலுள்ள கரட்டுப்பட்டி கிராமத்திற்கு கால்நடை மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தைக் கண்டித்து, பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காலை, மாலை ஆகிய இருவேளைகளில் வாரம் இரண்டு நாட்கள் கீழநாச்சிகுளம் வந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழநாச்சிகுளம் கிராமத்திற்கு சரிவர மருத்துவர்கள் வருவதில்லை என்றும், இதனால் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பசு, காளை மாடுகள், ஆடுகள் நோய்வாய்ப்படும்போது, கரட்டுப்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்ய கீழநாச்சிகுளம் கிராம மக்களுக்கு அதிக பணச் செலவு ஏற்படுகிறது எனவும், இது குறித்து மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது முறையாக வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக மண்டல இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், மருத்துவர்கள் அக்கிராமத்திற்கு வரவில்லை என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாக, இன்று காலை 10க்கும் மேற்பட்ட பசு மாடுகளுடன் கீழநாச்சிகுளம் கிராமத்தின் மாடு வளர்ப்போர் திடீரென பேருந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்லும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாறன் மற்றும் காவல்துறையினர், சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து கீழநாச்சிகுளம் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை..!