மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கச்சிராயன்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் செப்டம்பர் 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. யாகசாலை தீயில் வைக்கப்பட்ட காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனையடுத்து மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா யாகசாலை நெருப்பில் இடப்பட்ட காசுகளை கைப்பையில் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில், வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது சாலக்கிப்பட்டி அருகே எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.
சங்கீதா தன்மீது பற்றி பரவிய தீயை அணைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சங்கீதா உடலில் 60 விழுக்காடு அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டது இதன் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரழந்தார். எரிந்து கொண்டிருந்த யாகசாலையில் இருந்து சூடான காசை கவனக்குறைவாக கைப்பையில் எடுத்து சென்றதே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு