மதுரை: பயணிகள் ரயில்களில் சரக்கு போக்குவரத்துக்கு என தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சர்வீஸ் நடைபெற்று வருகிறது. அதேபோல தபால்கள் பயணிகள் ரயில்களில் தனிப்பெட்டிகளில் அல்லது சரக்கு பெட்டிகளில் ரயிலில் மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகிறது. வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக இந்திய ரயில்வேயும், இந்திய தபால் துறையும் இணைந்து ரயில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றன.
தற்போது சூரத் - வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை நடைபெற்று வருகிறது. இந்த சேவையில் தபால் துறை தனது வாடிக்கையாளர்களிடமிருந்து சரக்குகளைப் பெற்று ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பின்பு பார்சல் சேரும் ரயில் நிலையத்திலும் ரயிலில் வந்த பார்சலைப் பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் உற்பத்திப்பொருட்கள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து நேரடியாக வாடிக்கையாளரின் வாசலுக்கே சென்று சேரும் வாய்ப்பு உள்ளது.
வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கும் இந்த திட்டத்தை மற்ற பகுதிகளிலும் குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் இந்திய ரயில்வே, இந்திய தபால் துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் திங்கட்கிழமை (19.12.2022) காலை 10.30 மணிக்கு மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் முதல் மாடியில் இருக்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் ரயில்வே வாரியத் திட்ட இயக்குநர் ஜி.வி.எல்.சத்ய குமார், மதுரை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர்.பி. ரதிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரை ஆற்ற இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சென்ற குடிநீர்!