மதுரை: மதுரையை அடுத்த குறவக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "மதுரை உசிலம்பட்டியை அடுத்த குறவக்குடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் பலர் கூலி வேலை செய்துவருகின்றனர். எங்கள் கிராமத்தின் ஆதிதிராவிடர் காலனி கிழக்குத் தெருவைப் பிரதான பாதையாக மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தத் தெரு, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை.
இங்குக் கழிவுநீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைத்துத் தர அலுவலர்களிடம் கேட்டிருந்தோம். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் காலனியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க இரண்டு தவணையாக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை ஒதுக்கி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக சிமென்ட் சாலை, கால்வாய் அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மனுதாரர் வசிக்கும் பகுதியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாயை நான்கு வாரங்களில் அமைக்க வேண்டும்.
இந்தப் பணிகள் முடிந்தது குறித்து அடுத்த மாதம் இந்த நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: வார்டு மறுவரையறை வழக்கு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு