மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ஜெய வெங்கடேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழக அரசு 1970 பிப்ரவரி 10ஆம் தேதி பிறப்பித்த அரசாணையின்படி கோயில்களில் சித்த மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இதையடுத்து தமிழ்நாடு கோயில்களில் எத்தனை சித்த மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரியபோது, 6 சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றிவருவது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அரசு அலுவலர்களிடம் மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சித்த மருத்துவமனையை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் சித்தா மருத்துவத்தில் வருங்காலங்களில் ஊசிகள் போடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பேசிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைக்காக எத்தனை சித்த மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. அங்கு ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
அரசுத் தரப்பில் 33 கரோனா சித்த மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருவதாகவும், அங்கு ஆக்ஸிஜன் வசதி செய்யப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல், அவசர சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உடனடியாக 33 சித்த கரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் தற்காலிகமாக மூடப்படும் சித்த மருத்துவ மையம்!