இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய வேளையில், இந்தியா போதிய அளவிற்கு சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து பல முறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எந்த அளவிற்கு சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்கள் உள்ளனவோ, அவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று பதில் சொல்லப்பட்டது. சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நாள்தோறும் அரசிடம் முன்வைக்கப்படுகிறது.
மதுரையில் உள்ள ஐ.சி.எம்.ஆர். ஆய்வகத்தில் பிசிஆர் கருவி உள்ளது. அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன. இதைவிட ஐ.சி.எம்.ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா? அதில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். ஆனால் கரோனா குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.
மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக சோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலமே நோய்த் தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்து நோய் பரவாமல் தடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முட்டை வழங்கிய அமைச்சர்