மதுரை: மதுரை ஆவின் தொழிற்சாலையில் எட்டு மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (அக்.06) தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு மாதங்களாக எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அடைந்துள்ளது. பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும். தற்போது கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்க உள்ளோம். உலக அளவில் பார்த்தோமானால் கால்நடை வளர்ச்சி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நாளைய தினம் (அக்.07) இரண்டு திட்டங்களை துவக்கிவைக்க உள்ளோம். நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை திண்டுக்கல்லில் துவங்க உள்ளோம்.
இதையும் படிங்க: தயாரானது தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை..! மாெழிமாற்றம் செய்ததும் அரசிடம் சமர்பிப்பு!
ஆவினை பொருத்தவரை குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது. எங்களுடைய லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் எங்கு தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடித்து, அதற்கு எந்த சட்டத்தில் தண்டனை வழங்க வேண்டும் என அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே, நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் உற்பத்தி தொடங்கி தாராளமாக வழங்கப்படும்.
ஆவினில் சென்ற மாதத்தில் எட்டு சதவீத விற்பனை உயர்ந்துள்ளது. படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனது வீடு திறந்தே தான் இருக்கும். பால் தொடர்பான எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தோ என்னை தொடர்பு கொள்ளலாம், தீர்வு காணப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அதிகாரிகளையே மிரள வைத்த 12 மணிநேர சோதனை.. நெல்லை அரசு அதிகாரியிடம் இவ்வளவு சொத்தா?