மதுரை: ஆனையூர் அருகே மலர் நகர் பகுதியில் ரோஜா மலர் தெருவில் வசித்து வருபவர் புகழ் இந்திரா. இவர் தன்னுடைய இரண்டு வீட்டினை OLX மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்ததாகக் கூடல் புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபர்களிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டு வீடு பராமரிப்பு எனக் கூறி தாமதம் செய்துள்ளார். அந்த இடைவெளியில் மற்ற நபர்களுக்கும் அதை விட்டு ஒத்திக்கு விடுவதாகக் கூறி அவர்களிடமும் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இந்த மோசடி குறித்து முதற்கட்டமாக 4 பேர் புகார் அளித்துள்ள நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்கள் வருவதால் கூடல் நகர் காவல்துறை வட்டாரத்தில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பாலமுருகன் கூறுகையில், ஒத்திக்கு ஏதேனும் வீடு கிடைக்குமா என்று OLX-ல் பார்த்து வந்ததாகவும், அப்போது ரோஜா மலர் வீதியில் ஒத்திக்கு ஸ்ரீ புகழ் இந்திரா என்பவரது வீடு ஒன்று உள்ளதைக் கண்டோம். தொடர்ந்து ஸ்ரீ புகழ் இந்திராவிடம் வீடு ஒத்திக்காகப் பேசி, ரூ.8 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் வீட்டை 3 மாதங்களாக அளிக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இதனிடையே, அதே வீட்டிற்கு மற்றொருவரும் வந்து பணம் அளித்துள்ளதாக வந்திருந்தனர். ஆகவே, ஸ்ரீ புகழ் இந்திரா ஒரே வீட்டை எங்கள் இருவருக்கும் ஒத்திக்கு அளித்து பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து கூடல் நகர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தோம். ஆனால், போலீசார் இந்த விவகாரத்தில் ஒருவாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும், எடுக்காததால் ஆணையர், துணை காவல் ஆணையர் ஆகியோரிடம் சென்று புகார் தெரிவித்தோம்.
இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து போலீசார் கடந்த 24ஆம் தேதி அவரிடம் இருந்து பெற்றுத் தந்த காசோலை 8ஆம் தேதி பணம் இல்லை எனக் காசோலையை வங்கி அதிகாரிகள் திருப்பிவிட்டனர். இதனை மீண்டும் துணை காவல் ஆணையரிடம் சென்று தெரிவிக்கவே அவரை கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் இவர் மட்டுமில்லாமல், இவரது பெற்றோர், மனைவி, மகள், மகன் என அனைவருக்கும் இணைந்து பலரிடமும் கூட்டுச் சதி செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கிட்டத்தட்ட சிசிபியில் ரூ.47 லட்சத்திற்கும் மேல் நிலுவை உள்ளது. ஏற்னகவே, சிறைக்கும் சென்றநிலையில், மீண்டும் இவ்வாறு பணம் மோசடி செய்து வருகின்றனர்.
கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை வீடு உள்ளிட்டவைகளில் வைத்துக்கொண்டு, தனக்கு அரசியல் கட்சிகளில் செல்வாக்கு உள்ளது எனவும் ஆகவே, உன்னை கொலை செய்துவிடுவேன் என என்னையும் தனது குடும்பத்தையும் மிரட்டல் விடுத்துள்ளார். உன்னுடைய பணத்தைத் தர முடியாது, உன்னால் முடிந்ததைச் செய்துகொள், நான் சிறைக்குச் சென்றால் பதினைந்து நாட்களில் வெளியே வந்துவிடுவேன் என அவர் கூறியுள்ளார்.
ஆகவே, இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து மேலும் இதுபோன்று யாரும் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதன் மூலம் கோரிக்கை வைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து பேசிய ராஜேந்திரன் கூறுகையில், 'உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் வீட்டில் உள்ள பெண்கள் குறித்து அநாகரீகமாகவும் பேசுவதாகவும் வருந்தினார். நான் ஓய்வுபெற்ற BSNL அலுவலர் என்றும் OLX-ல் வீடு தேடியபோது மதுரை ஆனையூர், மலர் நகர்-ரோஜா மலர் வீதியில் உள்ள ஸ்ரீ புகழ் இந்திராவை பார்த்ததாகவும், வீடு ஒத்திக்கு ரூ.7 லட்சம் என ஒப்பந்தம் போட்டதாகவும் கூறினார்.
அந்த ஒப்பந்தத்தில் அவர் குடும்பத்தினர் எல்லோரும் கையெழுத்து போட்டுள்ளனர். அதன் பின், வீட்டை 3 மாதங்களாக ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்ததாகவும், இது குறித்து கேட்டபோது எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதாகவும், மேலும் அவரது வீட்டில் ஆளும் கட்சியினரின் புகைப்படங்கள் வைத்துக்கொண்டு தனக்கு செல்வாக்கும் அதிகமுள்ளதாகவும் காட்டி கொண்டு பலரையும் மோசடி செய்துள்ளதாகக் கூறினார். எங்களைப் போல, பலரிடமும் ஏறத்தாழ ரூ.42 லட்சம் வரைக்கும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆகவே, இந்த மோசடி விவகாரத்தில் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் குற்றம் செய்தவருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என கோரிக்கை அவர் வைத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய பாலமுருகன், இத்தகைய மோசடி குறித்து காவல்துறையில் புகார் அளித்தது தெரிந்து ஏமாந்த மேலும் சிலர் வந்தபோது, அவர்களிடம் ஒரு காரை எடுத்துக்கொள்ளும்படி கூறியதாகவும், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100-க்கு அழைத்து தங்களது காரை திருடி விட்டதாகவும் அவரே புகாரும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த நிலத் தகராறு.! சண்டையை விலக்கச் சென்றவர் அடித்துக் கொலை!