மதுரையில் உள்ள திருக்குளங்களில் மிக முக்கியமானது கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பெருமாள் தெப்பக்குளம். இது டவுன்ஹால் ரோட்டில் மேலவெளி வீதியில் அமைந்துள்ளது.
கூடல் அழகர் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த குளத்திற்கு கிருதுமால் நதியில் இருந்து தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்கால் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான ஆண்டுகளில் கூடலழகர் பெருமாள், தெப்பத்தை சம்பிரதாய முறைப்படி வலம் வருகின்ற நிகழ்வு இன்றைக்கும் நடைபெற்று வருகிறது.
இதனை சுற்றி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் பரவி தெப்பத்தின் கரையோரங்களில் பல்வேறு கடைகள் தொடங்கின.
ஆகையால் இப்பகுதியில் ஒரு குளம் இருந்ததற்கான எந்த அடையாளமும் வெளியே தெரியாமல் இருந்தது.
குளத்தின் கரைகளில் சுற்றியிருந்த கடைகளை அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி குளத்தின் தென்புறத்தில் ஆறு கடைகளும் கீழ்ப்புறத்தில் உள்ள ஏழு கடைகளும் என மொத்தம் 13 கடைகள் கூடல் அழகர் பெருமாள் கோயில் நிர்வாகத்தால் நீதிமன்ற உத்தரவுபடி இடிக்கப்பட்டன
மேலும் சில கடைகளுக்கான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலவில்லை என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட நிலையில் தெப்பத்தின் மைய மண்டபம் தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.