மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை வேங்கைவயல், இறையூர் பஞ்சாயத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட நீர்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைந்துள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் கழிவு நீர் கலக்கப்பட்டது. இந்த கழிவு நீர் தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக் குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரிய வந்தது.
புதுக்கோட்டை, வேங்கைவயல் பகுதியில் இது போன்ற பல தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றது. மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கழிந்த கழிவு நீர் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. பின் இந்த விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஆனால், இதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழிந்த கழிவு நீர் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடுகின்றனர்.
மேலும் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கை எந்த விசாரணை அமைப்புகளுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மக்களும் இது போன்ற சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள். சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனித வளம் இல்லை இந்த வழக்கை விசாரிக்க இயலாது என தெரிவிப்பார்கள்.
ஆனால், தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது. கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது போன்ற சம்பவங்களை தடுக்க இயலும்'' என கருத்து தெரிவித்து வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மேஜர் ஜெயந்த் மரணம்; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!