திருநெல்வேலியைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் மாரியப்பன் என்பவர் கலைமாமணி விருது வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "2011, 2018 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுக்கு 201 பேரை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலர் உறுப்பினர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை, நாடக, மன்றத்தின் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது.
மேலும் விருதுக்கு தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அது போன்றவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் சார்பில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி சுரேஷ்குமார், வருகின்ற 13ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற உள்ள கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ் என்பவருக்கு மட்டும் விருது வழங்க தடைவிதிக்கப்படுகிறது எனவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அனைத்து கலைஞர்களிடம் விண்ணப்பம் பெற்று வெளிப்படைத் தன்மையுடன் பரிசீலித்து, விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.