மதுரை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 'சிறப்பு பாபா தரிசன யாத்திரை' சுற்றுலா ரயில் ஒன்றை தென்னக ரயில்வே சீரடிக்கு இயக்கவுள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் "ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பாபா தரிசன யாத்திரை" என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்க இருக்கிறது. இந்த ரயில் 05.01.2021 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், மந்திராலயம், பண்டரிபுரம் வழியாக சீரடி வரை இயக்கப்படவுள்ளது.
![பாபா தரிசன யாத்திரை ரயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-04-baba-spl-train-nea-year-script-7208110_07122020173406_0712f_1607342646_324.jpg)
மந்த்ராலயம் குரு ராகவேந்திரர், பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன், சீரடி சாய்பாபா தரிசனம் ஆகியவை இந்த ஆறு நாட்கள் சுற்றுலாவில் அடங்கும். ரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், சுற்றுலா தலங்களில் சாலை வாகன ஏற்பாடு ஆகிய வசதிகளுடன் நபர் ஒருவருக்கு ரூபாய் 5 ஆயிரத்து 685 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் தீபாவளி கங்கா ஸ்நானம் ரயில் சுற்றுலா நடத்தப்பட்டது. இதில் 480 பயணிகள் கலந்துகொண்டு தீபாவளி திருநாளை காசியில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் "பாரத தரிசன சுற்றுலா" என்ற பெயரில் 370க்கும் மேற்பட்ட ரயில் யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மதுரை ரயில்வே சந்திப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 வயது முதல் 65 வயது உள்ள நபர்கள் எவரும் இதில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 8287931977 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![பாபா தரிசன யாத்திரை ரயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-04-baba-spl-train-nea-year-script-7208110_07122020173406_0712f_1607342646_1103.jpg)