மதுரை:மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், “இந்திய ரூபாய் நோட்டுகளில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை அச்சிடக்கோரி அளிக்கப்பட்ட மனு குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒன்றிய அரசோ மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்காமல் நிராகரித்துள்ளது.
ரூபாய் நோட்டில் நேதாஜி உருவப்படம்
இதனை ரத்து செய்து, நேதாஜியின் படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு இன்று (ஆக.10) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”கடந்த அக்டோபர், 2010ஆம் ஆண்டு ஒன்றிய அரசு, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்தை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலித்தது.
அப்போது மகாத்மா காந்தி படத்தைத் தவிர, வேறு புகைப்படம் இந்திய ரூபாய் நோட்டில் இடம் பெற இயலாது என குழுவினர் தெரிவித்ததை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டது” என்றார்.
சாதி, மத சாயம் பூசும் அபாயம்
இதனை பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், ரூபாய் நோட்டில் பதிவு செய்யப்படும் வேறு இந்திய தலைவர்களின் படங்களுக்கு சாதி, மத ரீதியாக சாயம் பூசப்படும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும் தமிழ்நாடு மறைமுகமாகவும் தாக்கப்படுகிறது- ராகுல் காந்தி