மதுரை: நெல்லை டவுன் காமாட்சியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அதில், "ஒவ்வொரு ஆண்டும் நெல்லை டவுன் ஸ்ரீ மாரியம்மன் தசரா விழா கொண்டாடப்படும். இந்தக் கோயிலிலிருந்து அம்பாள் சப்பரம் நெல்லையப்பர் கோயில் நான்கு ரத வீதி வழியாகச் சென்று பின்னர் கோயிலுக்கு வந்துசேரும்.
இந்த ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் கோயில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைப்பிடித்து விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே, வருகின்ற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) அம்பாள் சப்பரம் வீதி உலா சென்றுவர அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துணிக்கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் பக்தர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் வருகிற 14ஆம் தேதிக்குள் உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாம்பை விட்டு மனைவிக் கொடூர கொலை.. நீதிமன்றம் தீர்ப்பு...