சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் உள்ளார். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, என்னை முதல் குற்றவாளியாக சேர்த்து விசாரித்தனர். இந்த வழக்கில் பல்வேறு மாணவர்களும், பெற்றோர்களும் சேர்க்கப்பட்டனர்.
வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி பிணையில் உள்ளேன். இந்த வழக்கு விசாரணையின்போது எனது 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்று, சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களை கேட்கின்றனர். எனவே, எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற தயாராக உள்ளேன் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 12) நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கூறும்போது, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் எந்த ஒரு சான்றிதழும் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவரின் சான்றிதழ் எங்கிருந்தாலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.