மதுரை: நெல்லை மாவட்டம் பார்பரம்மாள் புரத்தை சேர்ந்த அற்புத நவரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் .
அதில், "எங்கள் ஊரான பார்பரம்மாள் புரத்தில் 225 ரேஷன் அட்டைதாரர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில், எங்கள் ஊருக்கு அருகே உள்ள பதைக்கம் என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில்தான் வாங்க வேண்டியிருந்தது .
அந்த ஊரில் 25 ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே உள்ளனர். அந்த ரேஷன் கடை கட்டிடம் தாமிரபரணி கருமேந்தல் குடிநீர் திட்டத்திற்காக நிலம் எடுக்கப்பட்ட போது இடிக்கப்பட்டது.
அப்போது எங்கள் ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டுமென தெரிவித்தோம். ஆனால், அலுவலர்கள் அதனை நிராகரித்து வெறும் 25 ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே உள்ள பதைக்கம் பகுதியில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அங்கு கட்டப்படும் கட்டிடத்திற்கு தடைவிதித்து எங்கள் பகுதியான பார்பரம்மாள் புரத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் "எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.