கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ”எனது மகன் காசி மீது ஏப்ரல் 24ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காசி மீது ஏப்ரல் 29ஆம் தேதி குமரி மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். காசி மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யான வழக்குகள்.
இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. காசி மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை. மேலும் நீதிமன்றத்தில் பிணை கேட்டு வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவது சட்ட விதிகளை மீறும் செயலாகும். எனவே காசி மீது பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம்