மதுரை: மதுரை மாநகர் செல்லூரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன். இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி வார்டு எண் 24 மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட உள்ளார். இதற்காக இன்று (ஜன.31) ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டலம் ஒன்றில் மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது ஒரு தட்டு நிறைய டம்மி ரூபாய் நோட்டுகளுடனும், பதாகையுடனும் வந்து ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர பாண்டியன், " ஓட்டுக்கு பணம் கொடுக்கின்ற வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும். நம் ஜனநாயக அமைப்பைக் காப்பாற்ற வேண்டுமானால் இது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியம்.
தற்போது மதுரையில் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவதை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வந்து மனுத்தாக்கல் செய்தேன்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!