மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்தால் தண்ணீரின்றி வைகை வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் மதுரை மாவட்டம் முழுவதிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், மழை பொழிந்து விவசாயம் கொழிக்க வேண்டியும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கி பருவமழை பொழிந்து மக்கள் இன்புற்று வாழ வேண்டியும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில் தமிழ்நாடு இசைக்கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவியர்கள், பேராசிரியர்கள் இசை ஆராதனை செய்தனர்.
இதில் தமிழ்நாடு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட், வைகை நதி மக்கள் இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இசை ஆராதனையின்போது பல்வேறு தெய்வங்களை வணங்கும் வகையிலான இசை பாடல்கள் இசைக்கப்பட்டது. விநாயகர், மீனாட்சியம்மன் துதி பாடல்கள், அமிர்தவர்ஷிணி ராகத்திலான பாடல்கள் என ஐந்து பாடல்கள் பாடப்பட்டது. மழை வேண்டி இசை வழிபாடு நடத்தப்பட்டுள்ளது, வழிபாட்டின் பலனாக மழைபெய்து நீர்நிலைகள் நிரம்பி வைகையிலும் நீர் கரைபுரண்டோடும் என விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தெர்மாகோலை மிதக்கவிட்டு நீர் ஆவியாவதை தடுக்கிறேன் என செல்லூர் ராஜூ செய்த செயலால் மதுரைவாசிகளை இணையவாசிகள் வறுத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மழை வேண்டி இசை ஆராதனை செய்திருப்பது இணையவாசிகளுக்கு புதிய கண்டெண்ட் கொடுப்பது போல் அமைந்துள்ளது. மேலும், மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசு மூட நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கிறது. இதுபோன்ற பிற்போக்குத்தனங்களை அரசு ஆதரிக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கூறிவருகின்றனர்.