மதுரை: வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட பூ வியாபாரிக்கு மோட்டார் வாகன தீர்ப்பாயம் வழங்கிய இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க கோரிய வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சத்து 82 ஆயிரத்து 600 ரூபாயை, ஆண்டுக்கு 7.5% வட்டியுடன் 12 வாரத்தில் வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கணபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "நான் பூ வியாபாரி. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் பலத்த காயமடைந்தேன். இதில், எனக்கு இடது கால் தொடைக்கு கீழ் அகற்றப்பட்டது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த கும்பகோணம் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் எனக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
விபத்தில் எனக்கு 90 சதவீதத்திற்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது இடது கால் தொடை பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளது. நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னால் பூ விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளது. ஆகவே மோட்டார் வாகன தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு இழப்பீட்டை உயர்த்தித் தர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மனுதாரர் கோயிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அவர் கோயிலில் பூஜை செய்வதற்கான பூக்களை காலை, மாலை என இரு வேளைகளிலும் சென்று வாங்கி வர வேண்டி உள்ளது. இந்நிலையில் விபத்தின் காரணமாக அவரது இடது கால் தொடை பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் நுரையீரல் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவ சான்றிதழ்கள் குறிப்பிடுகின்றன.
வாகன தீர்ப்பாயம் மனுதாரருக்கு ஏற்பட்ட நிரந்தர குறைபாட்டை மட்டும் கருத்தில் கொண்டு உள்ளது. அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை கருத்தில் கொள்ளவில்லை. எனவே மோட்டார் வாகன தீர்ப்பாயம் வழங்கிய 2 லட்சுத்து 62ஆயிரத்து 120 ரூபாயை 10 லட்சத்து 82ஆயிரத்து 600 ரூபாயாக உயர்த்தி ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வட்டியுடன் 12 வாரத்திற்குள் போக்குவரத்து கழகம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.