மதுரை: 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை முதல்கட்டமாக நான்கு நாள்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கிய அவர், மூன்றாவது நாளாக இன்று (டிச.15) மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் மௌனமான முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், முதற்கட்ட பரப்புரையை மதுரை அவனியாபுரம், அண்ணா நகர், கருப்பாயூரணி உள்ளிட்டப் பகுதியில் தொடங்கினார்.
பாதுகாப்புக்காரணம் கருதி, கமல்ஹாசன் மைக் மூலம் பரப்புரையில் ஈடுபடக்கூடாது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டதையடுத்து, அவர் மௌனமான முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சித்தொண்டர்கள், அவருக்கு சாலையோரங்களில் நின்றபடி உற்சாக வரவேற்பு வழங்கி வருகின்றனர்.
மதுரை - திருமங்கலத்தில் தனது பரப்புரையை முடித்துவிட்டு கள்ளிக்குடி, அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டங்களில் மூன்றாவது நாளாக இன்று (டிச.15) பரப்புரை செய்யவுள்ளார்.
இதையும் படிங்க: 'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை