மதுரையில் நடைபெற்ற தனது ஆதரவாளர் வழக்கறிஞர் மோகன்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கலந்துகொண்டார். அத்திருமண நிகழ்ச்சியிலேயே தனது 69ஆவது பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதனையடுத்து மேடையில் பேசிய அழகிரி, திமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், இலங்கை தமிழர் பிரச்னையில் மதுரை மத்திய சிறையில் இருந்தபோது, வழக்கறிஞர் மோகன் குமார்தான் உதவி புரிந்தார். அதனை அவர் மறந்திருக்க மாட்டார். தற்போது நல்லது செய்தவர்களை மறந்து சென்றுவிடுவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களே எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால் என்னோடு பழகியவர்கள் என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்துவருகின்றனர். இந்த நிலைமையெல்லாம் எப்போது மாறப்போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவுதான். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததை சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன், மற்றவர்கள் மட்டும் கருணாநிதியின் பிள்ளை அல்ல, நானும் கருணாநிதியின் பிள்ளைதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, மணமக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு இருக்க வேண்டுமானால் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்.