மதுரை மாவட்டம் கூடல்நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் மைனர் சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி வீட்டிற்கு அருகேயுள்ள ஹரி என்ற நபர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், மைனர் பெண் என்றும் பாராமல் அவசர அவசரமாக முத்துப்பாண்டி என்ற கட்டிடத் தொழிலாளிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சிறுமி பரிசோதிக்க மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு சென்றபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் சந்தேகம் கொண்டு சிறுமியிடம், விசாரித்தபோது அவர் மைனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சிறுமியை கர்ப்பமாக்கிய ஹரி, மைனர் என்று தெரிந்தும் சிறுமியை திருமணம் செய்துகொண்ட முத்துப்பாண்டி இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இச்சட்டத்தின் கீழ் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள ஹரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.