மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூன்.12) ஆய்வு மேற்கொண்டார். தமிழ்மக்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் புராதான சின்னங்களை பாதுகாத்து, மேம்படுத்தும் அரசின் முயற்சி குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”தமிழ்நாடு மக்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் வகையில் ஏராளமான புராதான சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் தென் தமிழகத்தில் முக்கியமான ஒன்றாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை தமிழ் சமுதாயம் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையை ரூ. 8 கோடி மதிப்பில் மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நமது வரலாற்று சின்னங்களை நாகரீகம், பழமை மாறாமல் புதுப்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை பல்வேறு கால சூழ்நிலைகளையும் தாங்கி, நமது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றி வருகிறது. தற்போது திருமலை நாயக்கர் அரண்மனை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, பழமை மாறாமல் ஒளி - ஒலி காட்சி இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலம் நமது கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹால் புதுப்பிக்கும் பணி மூன்று கட்டமாக துவங்க உள்ளன. முதல்கட்டமாக வெளியில் உள்ள பூங்கா புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டு, நூலகம் அமைக்கப்படுகிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு, தமிழை தொடர்ந்து புறக்கணிக்கிறதே என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து அவர் பேசுகையில், “பழமையும். தொன்மையும் கொண்ட மொழி தமிழ். தமிழ், தமிழனை யாராலும் புறக்கணிக்கவோ, அழிக்கவோ முடியாது. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக்களை எழுதும் பழக்கத்தையும், கற்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். உலகளவில் நாகரீகம் கொண்ட மனிதர்களாக தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழையும், தமிழரையும் யாராலும் புறக்கணிக்க முடியாது.
தென் மாவட்டங்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெறாமல் உள்ளது. தென் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணியும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது மதுரை தூத்துக்குடி பெருவழி வளாக தொழிற் பூங்கா அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சியில் இருந்த அரசு, இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் கொண்டு வரவில்லை.
அதனால் தென் தமிழ்நாடு வளர்ச்சி பெறாமல் உள்ளது. சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தென் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். இதனை கருத்தில் கொண்டு புதிய தொழிற்சாலைகளை தென் தமிழகத்தில் அமைக்க, அரசு தொழில் முனைவோருடன் கலந்து பேசி வருகிறது” என்றார்.
ஆய்வின் போது மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ’ எனது கோரிக்கையை கலைஞர் நிறைவேற்றவில்லை’ - மருத்துவர் ராமதாஸ்