மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ’முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது இயற்கையான ஒன்று தான். அதற்கெல்லாம் முதலமைச்சர் அஞ்சுபவர் இல்லை. இது போன்ற சம்பவங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கும் வந்திருக்கிறது. அதனை காவல்துறை பார்த்துக் கொள்ளும்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை மதுரை மாநகருக்கு கொண்டு வந்துள்ளோம். வைகை ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது கனிமொழி ஹெலிகாப்டர் மூலமாக சென்றாரா? இல்லையே தரைவழியாக தான் சென்றார். அங்கு செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை அவர் பார்த்திருக்கலாமே. செல்லூர் ராஜு இங்கே இருப்பதால் தான் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு முல்லைப்பெரியாறு அணை குடிநீர் திட்டம் வந்துள்ளது.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்பது நியாயமான முறையிலும், தீர்க்கமான முறையிலும், தன்னிச்சையாக முதலமைச்சர் மட்டுமே எடுத்த முடிவு. இதில் அனைத்து விவசாயிகளும், பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு கடன் வாங்கி இருப்பவர்களுக்கு கூட விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது சாதனை. அதில் சிபிஐ விசாரணை கோருவது சரியானது அல்ல.
ஒரு மாநில அரசு வரம்பு மீறி கடன் வாங்க முடியாது. ஒரு துறையை பற்றி தெரியாத ஸ்டாலின் எப்படி துணை முதலமைச்சராக, மேயராக இருந்தார் எனத் தெரியவில்லை’ என்றார்.
தொடர்ந்து, சில அமைச்சர்களை தவிர மற்றவர்கள் சசிகலா குறித்தான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பது ஏன் என எழுப்பட்ட கேள்விக்கு, இது அரசின் நிகழ்ச்சி. அரசு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என கோபமாகப் பதிலளித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தக் கூடிய ஒரே சக்தி எடப்பாடி - எஸ்.பி.வேலுமணி