உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை என தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இவர்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த ஆண்டு சுமார் 40.19 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆவணி முல வீதி பகுதியில் அதிநவீன வசதி கொண்ட பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்க திட்டமிடபட்டு பணிகள் தொடங்கபட்டன.
சுமார் 110 நான்கு சக்கர வாகனங்கள், ஆயிரத்து 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் தகவல் மையம் பிரதான சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி உள்ளிட்ட இரண்டு தளங்களைக் கொண்ட கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இந்த கட்டுமானம், மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவின்போது சுவாமி வலம்வருவதில் இடையூறாக இருக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து அது தொடர்பாக பொறியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.