உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரு நாள் மட்டும் 64 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மதுரை, சென்னை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக இம்மூன்று மாவட்டங்களிலும் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று மட்டும் மதுரையில் 15 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. இதில் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறு பேர். இதனால் செல்லூரின் பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, முழுக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே வர முடியாது. அதேபோன்று அப்பகுதிக்குள் புதியவர்கள் யாரும் செல்லவும் முடியாது.
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் அருகே தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்லூர் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவலானதையடுத்து, சுகாதாரத்துறை ஆலோசனையின்பேரில் தற்காலிகமாக, தனது வீட்டைக் காலி செய்து, குடும்பத்துடன் புறநகர்ப் பகுதியிலுள்ள மற்றொரு வீட்டிற்குக் குடி புகுந்துள்ளார்.