மதுரை விமான நிலையத்தில் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பற்றிய கேள்விக்கு, 'ஆதிச்சநல்லூரில் இதுவரை ஏழு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. 1904ஆம் ஆண்டு பிரெஞ்ச் தொல்பொருள் ஆய்வாளராக இருந்தவர் தொடங்கி இதுவரை ஏழு கட்டங்களாக அகழாய்வு நடந்துள்ளது. அதனை மீண்டும் நாம் ஆய்வு செய்யப் போகிறோம். அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளோம்' என்றார்.
பின்னர், கீழடியின் ஆறாம் கட்ட ஆய்வு குறித்த கேள்விக்கு, 'கீழடி ஆறாம் கட்ட அகழாய்விற்கான அனுமதி கேட்கப் போகின்றோம். ஏனெனில், ஐந்தாம் கட்ட ஆய்வு இன்னும் இரண்டு வாரங்களில் முடிய இருக்கின்றது. விரைவில் ஆறாம் கட்ட ஆய்வுகள் தொடங்கும். குறிப்பாக, கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம்' என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊரில் 6,000 கோடி ரூபாய்க்கு அருங்காட்சியகம் அமைக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, 'ரூ. 6,000 கோடி அல்ல. அவர்கள் பட்டேல் சிலையையும் சேர்த்து கூறுகின்றனர். அது பிரதமர் பிறந்த ஊர் என்பதைவிட இந்தியாவின் தொன்மையான இடங்களில் அதுவும் ஒன்று. ஆகவே, அது பிரதமர் பிறந்த ஊர் என்று பிரித்து பேச வேண்டியதில்லை. நமது மாநிலத்திற்கான தேவைகளை நாம் நிச்சயமாக கேட்போம்' என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: கீழடிக்காக டெல்லி விரையும் அமைச்சர் - முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டம்!