மதுரை: விருதுநகர் மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் டீ கடைகள், உணவகங்கள் மற்றும் முடி திருத்த கடைகளில் பட்டியலின சமூக மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளதை எதிர்த்தும், தீண்டாமை கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செல்லாயி அம்மன், அய்யனார் கோயில் திருவிழாக்களில் பட்டியலின சமூகத்தினரும் வழிபாட்டில் பங்குபெற அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருத்தார். அதில் “விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கிராமத்தில் சுமார் 3000 துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே போல் ஆவியூர் தெற்கு தெருவில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர்.
ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவான செல்லாயி அம்மன் கோயில் ஈஸ்வரன் கோயில் மற்றும் அய்யனார் கோயில்கள் உள்ளன. ஆனால் இந்த கோயிலுக்குள் செல்வதற்கும், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்தல், வேல் குத்துதல் வரி வசூல் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பட்டியலின மக்கள் பங்கு பெறுவதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், எங்கள் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டீ கடைகளில் இன்றளவிலும் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உணவகத்தில் அமர்ந்து உணவு உட்கொள்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுகிறது. இது மட்டுமின்றி முடி திருத்தம் செய்வதற்கும் அனுமதிக்கப்படாமல் தீண்டாமை செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றன. எனவே விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் அந்த பகுதியில் தீண்டாமை செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஜூன் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு முன்னதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா? அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் விரிவாக விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: யூ டர்ன் திரும்புவதில் குளறுபடி... பாதசாரியை மோதி நிற்காமல் சென்ற கார்!