மதுரை: மதுரை பொதும்பு அதலையைச் சேர்ந்த கே.புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'மத்திய அரசு நாட்டிலுள்ள முக்கிய நதியை தூய்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் ரூ.30 ஆயிரம் கோடியில் கங்கை தூய்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 408 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 228 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
132 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கங்கை தூய்மை திட்டத்தில் 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு 2017 முதல் 2022 வரை ரூ.9,895.16 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டி, ஜிடிபியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஜிஎஸ்டி, ஜிடிபியில் தமிழகத்தை விட குறைந்தளவு பங்களிப்பு வழங்கும் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நதிகளை தூய்மைப்படுத்த கங்கை தூய்மைத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் வைகை, காவிரி, தாமிரபரணி ஆகியன முக்கிய நதிகளாகும். இந்த 3 நதிகளைப் பாதுகாக்க உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கின்றன. ஆனால், போதுமான நிதி இல்லாமல் 3 நதிகளும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால் வைகை, காவிரி, தாமிரபரணி நதிகளை தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கவும் அல்லது வைகை உள்பட 3 நதிகளை தூய்மைப்படுத்த சிறப்புத் திட்டம் அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.