மதுரை மாவட்டம், திருநகரைச் சேர்ந்த கலைவாணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் மதுரை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பகிர்மானப் பிரிவில் கணக்கு உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவர் 2015ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அன்றிலிருந்து நானும், எனது 11ஆம் வகுப்பு படிக்கும் மகனும் யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் நான் பணியாற்றும் அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு பி.காம் அல்லது அதற்கு இணையானப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
நான் தற்போது பி.சி.எஸ் மூன்றாண்டு பட்டப்படிப்பினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், சௌராஷ்டிரா கல்லூரியில் படித்துள்ளேன். ஆனால், அந்தப் பட்டப்படிப்பு பி.காம் பட்டப்படிப்புக்கு இணையானது எனச் சான்று இல்லாத காரணத்தால், கணக்கு மேற்பார்வையாளர் பணிக்கான பட்டியலில், எனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சி.எஸ் படிப்பு, பி.காம் பட்டப்படிப்புக்கு இணையானது என்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டி, காமராசர் பல்கலைக்கழகத்தில் அதற்கான சான்றுகோரிய போது, அதுபோலச் சான்றுகள் ஏதுமில்லை எனப் பதில் அளித்தனர்.
அதனால், எனது பதவி உயர்வு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உயர் கல்வித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ், வரும் கல்லூரியில் பயின்ற எனக்கு வழங்கப்பட்ட பி.சி.எஸ் பட்டப்படிப்பினை பி.காம் பட்டப்படிப்புக்கு இணையானது எனச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி நிஷா பானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் அவர், பி.சி.எஸ் பட்டப் படிப்பினை பி.காம் பட்டப்படிப்புக்கு இணையானது என மனுதாரருக்கு சான்று வழங்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு