மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட கோரிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது விவிபேட் இயந்திரத்தில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே அவர் அமர்ந்தார்.
இதையடுத்து, மண்டல அலுவலர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதித்து அவரது வாக்கு பதிவாகி இருப்பதாகக் கூறிய பிறகே, அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அவ்வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.