திருவண்ணாமலை : உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது உலகப் பிரசித்தி பெற்றது.
அந்தவகையில், ஊர்காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் டிச 1ம் தேதி தொடங்கி 17 நாள்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது வருகின்ற 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்களும் காலையும், மாலையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து 10வது நாளன்று அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கருவறை முன்பு பரணி தீபமும், அன்று மாலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது 6 மணி அளவில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு!
இந்நிலையில் திருக்கோயிலில் நான்கு திசைகளிலும் அமைந்துள்ள ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வரும் வழிகள், வெளியே செல்லும் வழிகள், கோயிலுக்குள் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்துவது தொடர்பான பணிகளிலும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா; வெகு விமரிசையாக நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!
முன்னதாக, கடந்த செப் 23ம் தேதி, சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு, கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்காக நடப்படும் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பஞ்சமுக தீப ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்