மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மைக் காலமாக போதுமான நிதி வசதியின்றி தள்ளாடி வருகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்சன் பணம் வழங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் பேராசிரியர்கள், அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள்கூட ஓரளவுக்கு தாக்குப்பிடித்தாலும், அடிமட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களும், அவர்தம் குடும்பங்களும் கடுமையான வறுமைப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கோரிக்கை: கடந்த நவம்பர் 25-ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அதன் தலைவரும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையருமான சுந்தரவல்லி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். அப்போது ஓய்வூதியர்களோடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சுந்தரவல்லியைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். இருப்பினும் இன்றளவும் இவர்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
ஓய்வூதியம் குறைக்கப்பட்டது: இது குறித்து பல்கலைக்கழகத்தில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்பெஷல் கிரேடு அட்டெண்டர் வீரய்யா கூறுகையில், "ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.21 ஆயிரம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அதில் ரூ.5 ஆயிரத்தைக் குறைத்து தற்போது ரூ.16 ஆயிரம் தருகிறார்கள்.
அதிலும் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த மாதம் வரை ஓய்வூதியம் வரவில்லை. இந்தப் பணத்தை நம்பித்தான் எனது குடும்பத்தில் எனது மனைவி, மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது ஊதியம் வராத நிலையில் வட்டிக்குக் கடன் பெற்று வாழ்கிறோம். வேறு வருமானம் எதுவும் கிடையாது. ரத்தக்கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
குடும்ப ஓய்வூதியம் பெறும் அன்புச்செல்வி கூறுகையில், "எனது கணவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது கடந்த 1995-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதிலிருந்து எங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி எனது குடும்பத்தில் 8 பேர் உள்ளனர். எனது மருத்துவ செலவுக்கே இந்தத் தொகை போதவில்லை.
ஆகையால் இந்தத் தொகையையும் மாதாமாதம் வழங்க முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட வேண்டும். பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டத்தால் நிறைய பேர் பயனடைந்து வருகின்றனர். அதுபோன்று எங்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்க வழி செய்ய வேண்டும்" என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: "மூணு மாசமா பென்சன் வரல".. மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேதனை!
நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது: இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத் தலைவர் முனைவர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தணிக்கைத்துறையின் தடைகளைக் காரணம் காட்டி ஓய்வூதியர்களை கொடுமைப்படுத்துவதை ஏற்க இயலாது. 30 ஆண்டுகளுக்கும் மேல் பல்கலைக்கழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பணியாளர்களே இன்றைய ஓய்வூதியர்கள்.
அலுவலக ஓய்வூதியர்கள் 528 பேர், ஆசிரிய ஓய்வூதியர்கள் 227 பேர், குடும்ப ஓய்வூதியர்கள் 438 பேர் ஆக மொத்தம் 1193 பேர். இவர்களில் கடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 100க்கும் மேற்பட்டோர். தற்போது இவர்கள் அனைவரையும் நடுத்தெருவில் பல்கலைக்கழக நிர்வாகம் நிற்க வைத்துவிட்டது வேதனையளிக்கிறது.
ஓய்வூதியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நிரந்தர வைப்புத்தொகை உருவாக்கி அதன் வட்டியின் மூலம் மாதாமாதம் ஓய்வூதியம் கிடைக்கச் செய்வது அல்லது அரசு ஊழியர்களைப் போன்று மாவட்ட கருவூலங்களின் வாயிலாக ஓய்வூதியம் வழங்குவது அல்லது ஒவ்வொரு ஆண்டும் தமிழக பட்ஜெட்டில் ஓய்வூதியர்களுக்கென்று தொகை ஒதுக்குவது உள்ளிட்ட தீர்வுகளை கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையரிடம் வழங்கியுள்ளோம்.
அவரும் இந்தப் பிரச்சனையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய வகையில் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.
நீண்ட காலமாக கண்ணீரும் கம்பலையுமாகப் போராடி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்