தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது, "வருஷநாடு பகுதியில் வைகை அணை, சுருளி அருவி அமைந்துள்ளதால் அவ்விடங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மயிலாடும்பாறை பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் தேனி, ஆண்டிபட்டி தாசில்தார் இந்த மரங்களை வெட்ட இருப்பதாக தெரிவித்தார். இந்த மரங்களில் பெரும்பாலானவை இருபது, முப்பது ஆண்டுகளை கடந்தவை. ஒரு சில மரங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை.
எனவே, மரங்களை வெட்டக் கூடாது என வலியுறுத்தி அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயிலாடும் பாறையில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மரங்களை எவ்வித காரணமுமின்றி வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறையும். ஆகையால், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியிலுள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, மறு உத்தரவு வரும் வரை மரங்களை வெட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும், இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்!