சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் தேவப்பட்டு மஞ்சுவிரட்டு விழா தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தேவப்பட்டு கிராமத்தில் அருள்மிகு அந்தர நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அதன் ஒரு பகுதியாக மஞ்சுவிரட்டு விளையாட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதிவரை நடைபெறும். வழக்கம்போல இந்த ஆண்டும் ஜனவரி 28ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற இருக்கிறது என சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பானையில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மஞ்சுவிரட்டு விழாவினை நடத்தும் விழா குழுவில் எல்லா சமூகத்தினரையும்போல பட்டியலின சமூகத்தினரும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேவப்பட்டு மஞ்சுவிரட்டு விழா குழுவில், அனைத்து பட்டியலின சமூகத்தினரையும் சேர்க்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 27ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : நெகிழி இல்லா துர்க்கை கோயில் !