ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "பாரதப் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போதிய சமூக இடைவெளிவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை வாங்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மருத்துவ முகக்கவசம் அல்லது N95 முகக்கவசங்களைத்தான் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமில்லை. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய மறுபயன்பாடு கொண்ட முகக்கவசங்களை பயன்படுத்தினாலே போதுமானது.
ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தனித்தனியாக முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும்பொருட்டு முதியோர்கள் வீட்டிலிருக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொண்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.