மதுரை மாவட்டம் ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் சு வெங்கடேசன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
மேலும் கலைஇலக்கிய பிரிவான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.
இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நூலுக்காக கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இவரின் 'காவல் கோட்டம்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனின் 'அரவான்' திரைப்படம் வெளியானது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற அகழ்வாய்வு தளத்தை வெளிக் கொண்டு வருவதிலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடைபெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை வெங்கடேசன் நடத்தியுள்ளார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் அதில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட ஏகே ராஜாவிடம் தோல்வியை தழுவினார்.
அதற்குப் பிறகு தேர்தலில் பங்கேற்காமல் கட்சி பணியில் ஈடுபட்டு வந்த சு வெங்கடேசன் தற்போது முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.