மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மதுரை வந்திருந்தார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது, திருப்பூரில் வடமாநிலத்தவர், தமிழர்களை அடித்து விரட்டியதாக கூறப்படும் சம்பவம் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “திருப்பூரில் நடைபெற்ற வடமாநில இளைஞர்களின் தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறித்து நெடுநாட்களுக்கு முன்பே நாங்கள் எச்சரித்துள்ளோம். தமிழர்களை தமிழ்நாட்டைவிட்டே அடுத்து விரட்டுவார்கள். 2-ஆம் 3-ஆம் தர குடிமக்களாக இருந்தால் இரு... இல்லாவிட்டால் போடா என்று இந்திக்காரர்கள் சொல்வார்கள். அவ்வளவுபேர் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கடந்த 2005ஆம் ஆண்டே ஈரோட்டில் வெளியாரை வெளியேற்று என்ற பெயரில் மாநாடு நடத்தினோம். அப்போதிருந்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.
வெளிமாநிலத்தவரை வரவழைத்து வேலை கொடுக்க வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்ட கட்சிகள்தான் திமுகவும், அதிமுகவும். கரோனா காலத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி வடமாநிலத்தவரை அவரவர் ஊர்களுக்கு அழைத்துச் சென்றார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கென்று சிறப்புக் கட்டுமானங்களை உருவாக்க நிதி நிலை அறிக்கையின்போது பேசியவர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
இதுபோன்ற செயல்பாடுகளால் தமிழர் தாயகம் பறிபோய்விடுமல்லவா..? கடந்த 25-ஆம் தேதி திருச்சியில் திமுக மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாட்டில் வடவர்களின் ஆதிக்கம் அதிகரிப்பது தொடர்பாக வேதனை தெரிவித்தார். அப்போது கூட, அவர் என்னதான் செய்தாலும் இவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று திமுக வாக்கு பறிபோவது குறித்துதான் பேசினார். தமிழர் தாயகம் குறித்தோ, தமிழ்மொழி, தமிழர் நிலை குறித்தோ அமைச்சர் நேரு கவலைப்படவில்லை.
இதை நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இங்கு குடியேறும் இந்திக்காரர்கள் திமுக, அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்குச் செலுத்தமாட்டார்கள். எடுத்துக்காட்டாக, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளே அங்கு மாறி, மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. அங்கு குடியேறியுள்ள இந்திக்காரர்களின் ஆதிக்கமே இதற்குக் காரணம். இதற்கான தீர்வு குறித்தாவது அமைச்சர் நேரு பேசியிருக்க வேண்டும். ஒப்புக்குக்கூட இல்லை.
வெளியார் சிக்கல் குறித்து திராவிட மாடலில் தமிழ்நாடு முதலமைச்சர் எவ்வாறு கையாள்வார்..? குறைந்தபட்சம் அவர்களது ஓட்டு வங்கியையாவது எப்படி பாதுகாக்கப்போகிறார்..? கடந்த 1956-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு வரை இங்கே இருந்தவர்கள்தான் மண்ணின் மக்கள். அவர்கள் பிற மொழியாளர்களாக இருந்தாலும் சரிதான். மரபு வழித் தமிழர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு. அதற்குப் பிறகு வந்த அனைவரும் வெளியார்தான். அவர்கள் அனைவரையும் வெளியேற்றுங்கள்.
நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போன்று உள் நுழைவு அனுமதி முறை தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். மிகையாக இங்கே தொழிற்கூடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் மண்ணின் வளங்கள் பாழாகின்றன. நமது நிலப்பரப்புக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்றவாறே இங்கு தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நிலைமைதான் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகருக்கும் ஏற்பட்டது.
தற்போது அந்நகர் மனிதர் வாழத்தகுதியற்ற நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரம்பற்ற தொழிற்பெருக்கம் கூடாது. அதுபோன்ற எந்தவித கொள்கைகளும் திமுக, அதிமுகவுக்குக் கிடையாது. பிற கட்சிகளும்கூட வலியுறுத்தவில்லை. பிற மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக இதுபோன்ற விசயங்களில் மாநில நலன் கருதி ஒன்றுபடுகின்றன. இந்திக்காரர்களை கர்நாடகமும், மராட்டியமும் எதிர்த்து வருகின்றன. தங்கள் அடையாளங்கள் அழிக்கப்படுவதை அந்த மாநிலங்கள் விரும்பவில்லை. இங்குள்ள கட்சிகள் அதனை ஏன் செய்வதில்லை.
இந்நிலையில் இவர்களிடம் வேண்டுகோள் வைப்பதைவிட தமிழர்கள் விழிப்புற்று எழ வேண்டும். வீதிக்கு வந்து போராட வேண்டும். திருப்பூரில் துணிந்து அடிக்கிறார்கள். இருவருக்குமான பிரச்னையில் அந்த இருவர்தான் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு இந்திக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நபரை அடித்துவிரட்டுகிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு தமிழர் தற்காப்பு அணி ஒன்று உருவாக வேண்டும். வடவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். இங்கு வியாபாரம் செய்யும் வடநாட்டுக்காரர்களிடம் தற்சார்பு தன்மையோடு நின்று ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். அவர்களிடம் பொருட்கள் எதுவும் வாங்கக்கூடாது. வன்முறையை அவர்கள் ஏவினால் அதனைச் சந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்த குழுவை நாம் உருவாக்க வேண்டும்.
இதுகுறித்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். திமுக, அதிமுகவை குறைசொல்லிக் கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் அறப்போராட்டம் நடத்த வேண்டும். தமிழர் வேலை வழங்கு வாரியம் ஒன்றை உருவாக்கி, ஆட்கள் தேவைப்படுகின்ற தமிழ் முதலாளிகளுக்கும், வேலை தேவைப்படுகின்ற தமிழ் இளைஞர்களுக்கும் பாலமாக இருந்து அது செயல்பட வேண்டும். அதுபோன்ற தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்ற தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். சட்டப்பூர்வமாக என்ன வேலை நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் செயல்படுத்த வேண்டும்.
வேலை நேரம் கூடுதலாகப் பார்க்கிறார்கள் என்று வெளியாட்களை வேலைக்கு வைப்பது மிகத் தவறு. பிறகு அவன் முதலாளியாவான். திருப்பூரில் அப்படிதான் நடந்திருக்கிறது. கட்சிக்காரர்கள் மட்டுமன்றி தொழில்முனைவோரும் இதனை படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும். அவ்வாறு அரசு மூடவில்லையென்றால், தமிழகர் தற்காப்பு அணி அச்செயலைச் செய்ய வேண்டும்.
திராவிட மாடல் குறித்து உயர்நீதிமன்றத்தின் விமர்சனம் என்பது தமிழ் மீதான பற்று என்பதால் அல்ல. திராவிட மாடல் என்பதே தவறு என்பதுதான் நமது வாதம். அது ஒரு கற்பனை, கயிறு திரித்தல். இங்கே எங்கிருக்கிறது திராவிடம்? யார் திராவிடன்? தமிழன் உண்டு. மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் உண்டு. திராவிடம் எங்கே உள்ளது? மு.க.ஸ்டாலினுக்கு இரண்டு போதை உள்ளது. ஒன்று டாஸ்மாக் போதை. மற்றொன்று திராவிட போதை. இதனை நம்பித்தான் தனது அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் குறுக்கே புகுந்து தமிழ்நாடுன்னு சொல்லாதே. தமிழ்நாடு என்று சொல் என விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்றதுதான் இந்த திராவிட மாடலில் ஆங்கிலம் என்பது குறித்தான அக்கறையும். இது ஒரு அரசியல் செய்தி. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை. திராவிட மாடல் என்பது ஃபிராடு மாடல். அதைத் தூக்கி எறிய வேண்டும். உனக்கு வேண்டுமென்றால் திராவிடன் என்று சொல்லிக் கொள். எங்கள் இனத்தை அதில் தூக்கிச் சுமக்காதே என்பதுதான் என் பதில். நான் திராவிடன் இல்லை என்று சொல்வேன். நீ, தமிழன் இல்லை என்று சொல் பார்க்கலாம்.
உங்களின் சூது எங்களுக்குத் தெரியும். தமிழ் இன மறைப்பு, தமிழ் மொழி மறைப்பு, அக்ரஹாரத்தின் பங்காளி நீங்கள். ஆரியத்தை, சமஸ்கிருதத்தை வைத்து, பாரத் மாதாவை வைத்து அவன் மறைப்பான். இவன் திராவிடத்தை வைத்து தமிழை, தமிழ்த்தாயை மறைப்பது இதுதான் இவர்களுடைய வேலை. இதில் நீதிமன்றம் குறுக்குசால் ஓட்டுகிறது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. திராவிடம் என்ற சொல்லே ஒழித்துக் கட்டப்பட்ட வேண்டியதாகும்” என்றார்.
இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: அதிமுக சார்பில் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு