மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள குப்பை அனைத்தும் அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். வழக்கம்போல் அவ்வாறு குப்பை வண்டியுடன் சென்ற தூய்மை பணியாளர்களை இங்கு குப்பை கொட்டக் கூடாது எனக்கூறி வினோத் குமார், அவரது சகோதரர்கள் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் வேலை செய்யும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குப்பை வாகனத்துடன் சென்று நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் புகாரின்பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருபத்தைந்து வருடங்களாக தூய்மை பணியாளர்கள் அப்பகுதியிலேயே குப்பை கொட்டி வருகிறார்கள். அப்பகுதியில் 150 வீடுகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளில் வினோத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் மட்டுமே பிரச்னை செய்து வந்துள்ளனர். குப்பையில் நெருப்பை பற்றவைத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதேபோல் இன்று கரோனா புகார் தொலைபேசியை தொடர்புகொண்டு் குப்பைகளால் கரோனா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தூய்மை பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது மற்றும் கரோனா ஊரடங்கு அத்துமீறி வெளியே வந்தது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் 20 ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சை சிறப்பு வார்டாக மாற்றம்!