கடந்த 2007ஆம் ஆண்டு அந்தமானை சேர்ந்த ஆங்மின்ட்-மேஸன் தம்பதி மதுரை மீனாட்சி கோயிலுக்கு தாங்கள் வளர்த்துவந்த மலாச்சி என்ற யானையை தானமாக வழங்கினர். மலாச்சியை கோயில் ஊழியராக பணியாற்றும் பாகன் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் பராமரித்துவந்தனர்.
இந்நிலையில் மலாச்சி யானை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒப்படைக்கப்படாமல் தெருக்களில் பிச்சை எடுக்கவும் திருமண விழாக்களில் பங்கேற்கவும் பழக்கப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக முரளிதரன் என்ற விலங்குகள் நல ஆர்வலர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் மலாச்சி யானை வனத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி தற்காலிகமாக விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும் அத்தீர்ப்பில் யானையை சித்ரவதை செய்ததாக அதன் காப்பாளர் லட்சுமணன்-இந்திரா தம்பதிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மலாச்சி யானைக்காக தனி யானை பராமரிப்பு இடம் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிலையில், பாகன் லட்சுமணன் அதனை பராமரித்துவந்தார். இதையடுத்து யானையை வனவிலங்குகள் காப்பகம் உள்ள திருச்சி எம்.ஆர். பாளையத்திற்குக் கொண்டுசெல்ல வனத் துறை முடிவு செய்திருந்தது. தொடர்ந்து இரண்டு முறை யானையை திருச்சிக்கு கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் யானையின் உடல்நிலை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனிடையே மூன்றாவது முறையாக திருச்சி காப்பகத்திற்கு மலாச்சி யானை கொண்டுசெல்லப்படுவதற்கான ஏற்பாடுகளை மதுரை வனத் துறை மேற்கொண்டது. திருநெல்வேலி வனத் துறையின் வனவிலங்கு உதவி மருத்துவர் சுகுமார் யானையை பரிசோதனை செய்தார். இப்பரிசோதனையின்போது வனத் துறை அலுவலர்கள் மற்றும் யானையை பராமரிக்கும் பாகன்கள் குமார், அழகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
யானை வனத் துறை வாகனத்தின் மூலம் கொண்டுசெல்வதற்கு ஏற்ற வகையில் உடல் நலத்துடன் இருப்பதாகவும், யானையைக் கொண்டுசெல்ல எந்தவிதத் தடையும் இல்லை என்றும் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![elephant-transferred-to-trichy-archive](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4382074_malachi.jpg)
இந்த நிலையில், யானையைக் கொண்டுசெல்வதற்காக கோவை வனக்கோட்டத்திற்குச் சொந்தமான சாடிவயல் யானைகள் முகாமைச் சேர்ந்த கனரக வாகனம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மலாச்சி யானை அங்கு ஒப்படைக்கப்பட்டது.