கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். இயற்கை இலவசமாக தந்ததை காசு கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இந்த நிலையில் மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். இதில் மறைந்த நடிகர் விவேக்கின் பங்கு மிக முக்கியமானது. நடிகர்கள் பலரும் மரம் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
மரம் செய விரும்பு - இளைஞர்களின் முயற்சி
அந்த வகையில் மதுரையில் உள்ள தன்னார்வ அமைப்புகள் நிறைய பணிகளைச் செய்து வருகின்றன. மரம் நடுதல், குறுங்காடு அமைத்தல், பனைமரம் குறித்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் தவிர்த்தல் எனப் பல்வேறு வகையிலும் பொது நோக்கத்தின் பொருட்டு அந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன.
அதில் குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய அமைப்பு 'மரம் செய விரும்பு'. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் மரம் நட்டு வருகின்றனர். அனுப்பானடி செல்லும் சாலையில் உள்ள தனியார் காலி இடத்தில், பதியம் போட்டு வைத்திருக்கும் கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
'மரம் செய விரும்பு' அமைப்பின் சார்பாக மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைச்சுற்றி 250-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு செழிப்பாக வளர்ந்துள்ளதைக் காணமுடிகிறது.
25 குறுங்காடுகள் அமைப்போம்
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவா கூறுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக மரம் நடும் பணியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறோம்.
அது மட்டுமன்றி மண்ணில் கிடைக்கும் விதைகளை எடுத்து பதியம் போட்டு வளர்த்து வருகிறோம். அந்த மரக்கன்றுகளை பொது மக்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம். அந்த வகையில் இதுவரை 15 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம்.
கரோனா 2ஆம் அலையில்தான் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை முழுவதுமாக உணர்ந்துள்ளோம். ஆனால், அதை தரக்கூடிய மரங்களை அழிக்கிறோம்.
நாங்கள் இந்த ஆண்டில் குறுங்காடுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவியாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
அதே அமைப்பைச் சேர்ந்த ராஜபாண்டியன் கூறுகையில், "நாங்கள் இப்போது 20 மாணவர்கள் உள்ளோம். கல்லூரி நேரம் முடிந்த பிறகு நாங்கள் இந்தப் பணியைச் செய்து வருகிறோம். இதற்கு பாலமுருகன் என்பவர் எங்களை ஊக்குவித்தார்.
தற்போதுள்ள இளைஞர்களுக்கு இந்தச் சமூக நோக்கம் இருக்கிறது. ஆனால், அதை எப்படி செயலாக்கம் செய்வது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. எங்களைப் போல அவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் இருந்தால் சமூகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக அக்கறையும், ஈடுபாடும்
ஒளிரும் மதுரை மற்றும் எக்ஸ்னோரா மதுரை நீர் நிலைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், "மரம் செய விரும்பு என்ற அமைப்பின் இளைஞர்களோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பணி செய்து வருகிறேன்.
அவர்களுடைய ஈடுபாடும் சமூக அக்கறையும் என்னை வியக்க வைக்கின்றன. இதுவரை அவர்கள் யாரிடமும் பணம் பெற்றதில்லை.
உதவி செய்ய முன்வருபவர்களிடம் விதை, வலை, பைகளைத் தான் பெறுகின்றனர். தற்போது எங்கள் அமைப்பு சாத்தியார் அணையில் இருந்து மதுரை வரை வாய்க்கால் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மரம் செய விரும்பு நண்பர்களும் இணைந்து அங்கு மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்த நாள்