டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியில் வசித்துவரும் இளைஞர் அம்சத் அலி (26) கலந்துகொண்டார்.
மாநாடு முடிந்து திரும்பிய இவரைக் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் மடக்கிப்பிடித்து 108 அவசர ஊர்தி மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று கரோனா கண்டறிதல் சோதனை நடத்தினர்.
அப்போது அவருக்குத் தொற்று இல்லை எனத் தெரிந்தது. இதையடுத்து, அவர் தோப்பூரில் உள்ள கரோனா சிகிச்சை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி இரவு அவருக்கு மீண்டும் சோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து கீழமாத்தூர் சீல்வைக்கப்பட்டது.
பின்னர் சுகாதாரத் துறையினர், அம்சத் அலியின் உறவினர்கள், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் என 77 பேரின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து கரோனா கண்டறிதல் சோதனைசெய்கின்றனர். மேலும், யாருக்கேனும் உள்ளதா என்பதையும் அவர்கள் கண்காணித்துவருகின்றனர்.