மதுரை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்றியங்களில் உள்ள மொத்த வாக்காளர்கள் ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 428 பேரில் மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 543 (77.06 விழுக்காடு) பேர் வாக்களித்தனர்.
இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்றியங்களில் உள்ள மொத்த வாக்காளர்கள் ஐந்து லட்சத்து 70 ஆயிரத்து 968 பேரில் நான்கு லட்சத்து 53 ஆயிரத்து 647 பேர் வாக்களித்துள்ளனர் (79.45 விழுக்காடு).
பதவிகள்
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 23, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 214 பேர், இவ்விரு பதவிகளிலும் இரண்டு பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ள நிலையில், 235 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
கிராம ஊராட்சி கவுன்சிலர்களைப் பொறுத்தவரை போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட 972 பேர் தவிர, இரண்டாயிரத்து 301 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஊராட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட 26 பேர் தவிர எஞ்சியுள்ள 394 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட பதவிகள் போக மீதமுள்ள இரண்டாயிரத்த 932 பதவிகளுக்கு எட்டாயிரத்து 682 பேர் போட்டியில் உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள்
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மைக் கல்லூரியிலும், மேற்கு ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருப்பாலையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
மேலூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மேலூர் அரசு கலைக் கல்லூரியிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாம்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் எண்ணப்பட்டுவருகின்றன.
வாடிப்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வாடிப்பட்டியிலுள்ள தாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும்,
அலங்காநல்லூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டுவருகின்றன.
செல்லம்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கருமாத்தூர் அருளானந்தர் கலைக் கல்லூரியிலும், சேடபட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எஸ். கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளியிலும், திருமங்கலம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருமங்கலத்திலுள்ள பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
டி. கல்லுப்பட்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கிளாங்குளம் சமபாரதம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளிக்குடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டுவருகின்றன.
ஏற்பாடுகள்
பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 120, மேற்கு ஒன்றியத்தில் 84, மேலூரில் 130, கொட்டாம்பட்டியில் 126, அலங்காநல்லூரில் 85, திருப்பரங்குன்றத்தில் 126, உசிலம்பட்டியில் 75, செல்லம்பட்டியில் 78, சேடபட்டியில் 70, திருமங்கலத்தில் 78, டி. கல்லுப்பட்டியில் 56, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 84 என மொத்தம் ஆயிரத்து 182 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாயிரத்து 965 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடுகின்றனர். மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இரண்டாயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து (Strong Room), வாக்குப்பெட்டிகளை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சீட்டுகளை வகைப்படுத்தி பிரிக்கும் அறைக்கு (Sorting Room) எடுத்துச் சென்று, வாக்குச் சீட்டுகளைப் பிரித்து, அங்கிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்லும் வரையிலான நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்ய உரிய எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளையும் பதிவுசெய்ய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள ஏதுவாக அடையாள அட்டைகள் (பதவி வாரியாக) வழங்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் செல்பேசிகளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டுசெல்ல அனுமதியில்லை.
வாக்கு எண்ணிக்கை முடிவினை http://tnsec.tn.nic.in/ என்னும் இணைய முகவரியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!