மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியில் சிப்காட் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று இயங்கிவருகிறது. அங்கு உள்ள அனைத்துப் பேருந்துகளுக்கும் போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் கிருமிநாசினி தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
அருகிலிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதனைசெய்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த புதூர் காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.