மதுரை: 32ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாறன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசியை தவிர்ப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி செல்வம், போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இதில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் மதுரையை சேர்ந்த காளிதாஸ் என்பவர் எழுதி இயக்கிய உயிர் காவலன் எனும் குறும்படம் வெளியிடப்பட்டது.
அக்குறும்படத்தில் எமதர்மனும் சித்திர குப்தனும் பேசிக்கொள்வது போலவும், அடுத்தடுத்து விபத்துகள் நடக்கும் என எமதர்மன் கூறும் நிலையில், போக்குவரத்து காவலர் விதிமீறி வரும் வாகனங்களை தடுத்து உரிய அறிவுரைகளை வழங்கி விபத்தை தடுப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி நடித்துள்ள இந்தக் குறும்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.