மதுரையில் இருந்து நேரடியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசி மாநகரத்திற்கு ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது. இந்த சுற்றுலா ரயில் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை மதுரையிலிருந்து புறப்படவுள்ளது.
தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அம்மாவாசை அன்று கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யவும், காசியில் கங்கா ஸ்நானம் செய்து ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ அன்னபூரணி தெய்வங்களையும் தரிசனம் செய்து, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடி, மானச தேவியை தரிசித்து, ஆக்ரா தாஜ்மஹால், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, புதுடெல்லி நகர் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து திரும்ப வரும் வழிகள் ஸ்ரீ ராமானுஜர் சமத்துவ சிலையையும் தரிசித்து வரும்படி சுற்றுலா பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த கோடை கால சுற்றுலாவில் குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. மேலும் சுற்றுலா தலங்களில் குளிர்சாதன அறைகளும் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த 11 நாள் சுற்றுலாவுக்கு கட்டணமாக அளிக்கப்படும் வசதிகளுக்கேற்ப 19 ஆயிரத்து 900 ரூபாய், 26 ஆயிரத்து 500 ரூபாய், 36 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் பயணக்கட்டணம், தென்னிந்திய சைவ உணவு தங்கும் வசதி, உள்ளூர் பேருந்து வசதி ஆகியவை அடங்கும்.
இந்த சுற்றுலாவிற்கு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி. (Leave Travel Concession) வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுற்றுலா பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள 9003140714 & 8287932122 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தட்டச்சுப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் இளம் தலைமுறை: பரிதவிப்பில் ஆசிரியர்கள் - என்ன காரணம்?